Friday 4 July 2014

எந்த ஏழு காலால் தீண்டத்தகாதவை?

சாணக்யா 
எந்த ஏழு காலால் தீண்டத்தகாதவை?

சாணக்யர் கூறுகிறார்:
அனல் விப்ர் குரு தேனு புனி கன்யா குவாரி  தேட் 
பாலக் கே அரு வ்ரித்  கே பக் ந லகாவாஹு ஏத் 

1) தீ. அது தெய்வத்துக்குப் புனிதமானது. அதை மிதிப்பது துரதிர்ஷ்டம்

2)குரு, பிராமணர் மற்றும் புனிதமான பசு  ஆகியோரைக் காலால்  தீண்டுவது  அவர்களை அவமதிப்பதாகும்

3)ஒரு கன்னி, ஒரு வயது முதிர்ந்தவர் அல்லது ஒரு குழந்தையை தன்னையறியாமலே கூட காலால் தீண்டுவது புனிதமற்ற செயல்


Wednesday 2 July 2014

வேதம் அநாதி

                                                



                                                     வேதம் அநாதி
 ங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, இங்கு வந்த சில ஆங்கிலேயர்களும், மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி நாட்டவர்களும் படிப்பில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் மிகுந்த சிரமத்துடன் வடமொழியைப் பயின்று பல வடமொழி நூல்களைப் படித்து, ஆங்கிலத்திலும் மற்ற ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்ப்புச் செய்திருக்கிறார்கள். சிறுகச் சிறுக இந் நூல்களைப் பற்றிய ஆராய்ச்சியும் செய்திருக்கிறார்கள். இப்படிச் செய்த பல ஆராய்ச்சிகளில் வேதத்தின் கால நிர்ணயமும் ஒன்றாகும்.

 முதலில், பொதுவாக, ஒரு நாட்டின் பண்டைய கலாச்சாரத்தைப் பற்றிய கால நிர்ணயம் எவ்வாறு செய்கிறார்கள் என்று பார்ப்போம். சமீப காலத்தில் கார்பன் டேடிங் பிராஸஸ் (Dsting process)
என்று ஒரு பரிசோதனை முறையைக் கண்டு பிடித்துள்ளார்கள். இதன்படி ஒரு நாட்டின் பண்டைய நூல்களோ, மத சம்பந்தமான பாசுரங்களோ, காவியமோ எழுதி வைத்திருக்கும் காகிதம், ஓலை உலோகத்தட்டுப் போன்ற பொருளைப் பரிசோதித்து அந்தக் கலாசாரத்தின் காலத்தை நிர்ணயிப்பார்கள்.

  உதாரணமாக எகிப்து நாட்டை எடுத்துக் கொள்ளுவோம். அவர்களுடைய மிகப் பழமையான கதையாகிய ‘சின்பாத் என்கிற மாலுமி’யும், அவர்களுடைய அக்கால தெய்வமான ஸூரியனின் மேல் உள்ள பாசுரங்களும், மற்ற படைப்புகளும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. நாணல் போன்ற நீர் வாழ் தாவரத்திலிருந்து தயாரித்த ‘பபைரஸ்’ (Papyrus) என்ற காகிதம் போன்ற பொருளில் அவர்கள் இவைகளையெல்லாம் எழுதி, அவைகளைச் சுருட்டி, சுருள் சுருளாக வெகு பத்திரமாகப் பெட்டிகளில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். கார்பன் டேடிங் பிராஸஸ் மூலம் இந்தப் பபைரஸ்யை ஆராய்ந்து எகிப்தின் பண்டைய நாகரிகம் இன்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சந்தேகத்துக்கிடமில்லாமல் நிர்ணயித்திருக்கிறார்கள்.

  இப்பொழுது ஈராக் என்று கூறப்படும் நாட்டில், வெகு காலத்திற்கு முன், பாபிலோனியன் நாகரிகமும் பண்பாடும் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தது. பல அரச வம்சங்கள் நாட்டை நல்ல முறையில் ஆண்டு, அயல் நாடுகளைப் போரில் வென்று, கோலோச்சி வந்தன. அந்தப் பண்பாட்டின் புகழ்வாய்ந்த இலக்கியமான கில்கமேஷின் காவியத்தையும் மற்ற மதசம்மந்தமான பாசுரங்களையும் அவர்கள் களிமண் ஓடுகளில் பொறித்தார்கள். நல்ல களிமண்ணால், சதுரமாகவும் நீண்ட சதுரமாகவும், மெல்லிய ஓடுகளைச் செய்து, அவைகள் ஈரமாக இருக்கும் பொழுதே, எழுத்தாணியால் அவர்கள் தங்களுடைய இலக்கிய, மத சம்பந்தமான படைப்புகளை அவைகளின் மேல் எழுதினார்கள். பிறகு, சூளையில் அவைகளைச் சுட்டு எடுத்தார்கள். இந்த ஏடுகளை அடுக்கிக் கட்டுகளாகக் கட்டிப் பெட்டிகளில் பாதுகாத்தார்கள். இந்த ஓடுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவைகளைக் கார்பன் டேடிங் பிராஸஸ் மூலம் பரிசோதித்ததில், இவைகள் 5500 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டன என்று உறுதியாகக் கூற முடிந்தது. பாபிலோனிய நாகரிகம் கி.மு. 35வது நூற்றாண்டில் வளம் பெற்று விளங்கியது என்று நிர்ணயிக்க முடிந்தது.

  இந்தியாவில் பௌத்த மதக் கோட்பாடுகளை, அசோகர் காலத்தில், கல்வெட்டுகளில் பொறித்தார்கள். மற்ற சில நாகரிகங்களின் இலக்கியத்தை செப்பேடுகளிலும் மற்ற பொருள்களிலும் பதித்தார்கள். இவைகளை எல்லாம் கார்பன் டேடிங் பிராஸஸ் மூலம் கால நிர்ணயம் செய்ய முடிந்தது.
ஆனால் ஆராய்ச்சியாளர்கள் வேதத்தைப் பற்றிய கால நிர்ணயத்தை இந்த முறையில் செய்ய முடியவில்லை. குரு  தன வாயால் ஓதி, சீடர்கள் காதால் கேட்டுப் பாடம் பண்ணி, மற்றவர்களுக்குப் பரப்பிய வேதத்தை எவ்வாறு கார்பன் டேடிங் செய்வது? அதுதான் எழுதாக் கிளவி ஆயிற்றே. ஆகையால் அவர்கள் வேறு இரண்டு முறைகளைக் கையாண்டு வேத காலத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

  ஆங்கிலேயர்களைப் போலவே சில இந்தியர்களும் வேத காலத்தை நிர்ணயம் செய்ய ஆராய்ச்சி நடத்தி இருக்கிறார்கள். நம் நாட்டு சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட மூத்த தலைவரான பாலகங்காதர திலகரும் அவர்களில் ஒருவர். ஆங்கிலமும், வடமொழியும் நன்றாகப் பயின்று, சம்பந்தப்பட்ட நூல்களைப் படித்து, ஆங்கிலேயரின் ஆராய்ச்சி முறைகளைப் பின்பற்றி அவர் கி.மு. 6000ல் வேதம் புனையப்பட்டது என்று நிர்ணயம் செய்திருக்கிறார். வேறு சிலர் வேதம் கி.மு. 3000ல் செய்யப்பட்டது என்கிறார்கள். மாக்ஸ்முல்லர் போன்ற சில அறிஞர்கள் இன்றும் சமீப காலமாக, கி.மு. 1500ல் வேதத்தை இயற்றினார்கள் என்று கூறுகிறார்கள். இவர்கள் கையாண்ட இரண்டு முறைகளையும் சற்று பார்ப்போம்.
(தொடரும்)

Saturday 28 June 2014

மனிதனுக்கு எதிரிகள் எத்தனை பேர் ?

              மனிதனின் எதிரிகள் எத்தனை பேர் ?



   மனிதனுக்கு எதிரிகள் எத்தனை பேர் ?


மனிதனுக்கு எதிரிகள் ஆறுபேர். அவர்கள் வேறெங்கும் இல்லை. அவனுக்குள்ளே தான்  இருக்கிறார்கள். -  - என்படி கடோபநிஷத் அந்த ஆறு  எதிரிகளைச்சுட்டிக் காட்டுகிறது  ஷட்புரி என்ற பெயரிட்டு. 
   கர்வம் என்ற மைய உருவத்தில்.அந்த ஆறு எதிரிகளின் ஓட்டம் நிகழ்ந்து வருகிறது . எப்படி? எந்தெந்த வடிவில்  வருகிறது?

(1) பிறப்பில் செல்வந்தனாக யிருப்பது.
(2) பதவியில் உயர்ந்தவனாக யிருப்பது.
(3) படிப்பில் - பாண்டித்யம் பெற்றிருப்பது.
(4) த ன்னை விட அறிவாளி யாரும் இல்லை என்ற செருக்கு.
(5) ரூப லாவண்யம் - தன் சரீர அழகில் உண்டான கர்வம்
(6) ஆன்மீகத்தில், ஒரு சிறு முன்னேற்றம் அடையும் முன்பே சாதித்து விட்டோம் என்று முன் வந்து  வந்து நிற்கும் ஆணவம்.

இந்த  ‘ஷட் புரி’ எதிரிகளை எப்படி அடக்கியாள்வது? 

கண்ணபிரான் அதற்கு ஒரு ஒரு நல்ல யுக்தியை கற்பித்திருக்கிறார். 

"ஏ! மனிதனே! நீ உன் உடலை ஒரு தேராக வைத்துக் கொள். அதில் உன் கண் - மூக்கு - வாய் - காது - மனம் உள்பட - 5 குதிரைகள். உன் மனமே அதற்கான கடிவாளம். அந்தத் தேரில் சவாரி பண்ணுகிறானே. அவனே ‘ஆன்மா’ குதிரைகள் திசைமாறிப் போக, நிறைய வாய்ப்பு இருக்கிறது. அவைகளை அடக்கி, ராஜ மார்க்கமான நல்ல திசையில் கொண்டு போவது, கடிவாளத்தைப் பிடித்திருக்கும் மனமேயாகும். அந்த மனமும் அலைபாயும் தன்மையுடையது. அதையும் திருத்தி அமைத்து, நேர் வழியில் செலுத்துவதற்கு ‘அறிவு’ வேண்டும். அந்த அறிவும் சாஸ்திர விதிகளை எடுத்துக் கொள்ளும் தன்மையும், அதையே வழிபட்டு நடைமுறைக்கும் கொண்டு வந்து நடத்திக் காட்டும், நம் முன்னோர்கள், மஹான்கள், ஆச்சார்யர்கள், சொல்லும் உபதேசத்தையும் நாம் எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம். வேதத்தை எடுத்து ஓத, அந்த சிவபெருமானே - சங்கரராக அவதரித்து பல கோணங்களில் எடுத்துரைத்திருக்கிறார்.

 புலன்களை அடக்கி ஆளாதவன் கதி அதோகதிதான் என்றே சொல்லுகிறார். 

மனது என்ற தேரோட்டியே தூங்கி விட்டால் என்ன கதியாகும்

நாரதர் என்ற பெயர் ஏன் வந்தது?

குரு ப்ரஹஸ்பதி 

நம் மனதில் பல கேள்விகள் எழுகின்றன. சில கேள்விகளுக்கு சில சமயம்
பதில் கிடைக்கிறது. சில சமயம் கிடைப்பதில்லை.
அத்தகைய சில கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் சொல்வது இந்த வலைப்பதிவின் நோக்கம்

நாரதர் என்ற பெயர்  ஏன் வந்தது?
 அவர் தீர்த்த தர்ப்பணம் நிறைய செய்வாராம். (நாரம் = தீர்த்தம்)
இன்னொன்று - பிரம்மஞானி என்பது (வடமொழி) சேர்த்து - நாரதர் ஆயிற்று.
(1) இப்படி எவனொருவன் தன் படுக்கையை - தீர்த்தத்தின் மேல் - அவனே நாராயணன்.

(2) பழையது: இதுவும் பகவானும் ஒன்றே >> பழைய சாதம் அவனும் புராண புருஷன், பழமையானவன்.

(3) பழையது - ஜலத்தில் ஊறி உள்ளது இவனும் ஜலேசயனம் என்று ஜலத்திலேயே கிடப்பவன்.

(4) பழையதின் பெருமை: அதை சாப்பிட்டு, அந்த நீரையும் குடித்து, வெயிலில் வேலை செய்யும் தொழிலாளி விவசாயிகளுக்கு மட்டுமே, அதன் குளிர்ச்சி அருமை தெரியும்.

அதேபோல இந்த நாரணனையும், அவன் சொன்ன கீதையையும், படித்து உ ணர்ந்து நல்வழி நடப்பவர்களுக்கு மட்டுமே. அந்த மனநிம்மதி - நிர்சலன உணர்வு என்பதெல்லாம் அறிய முடியும்.

Friday 27 June 2014

வேதம் எப்படி வந்தது?. எப்பொழுது உண்டாகியது?.

பரமாத்மா 
  வேதம் எப்படி வந்தது?. எப்பொழுது உண்டாகியது?.
  யார் அதைப் புனைந்தார்கள் என்றெல்லாம் சிந்திக்கத்தெரிந்த நமக்குள் கேள்விகள் எழுகின்றன. இதற்கு நமது நாட்டுப் பண்டைய மரபுகளும், தற்கால, முக்கியமாக மேல் நாட்டு, ஆராய்ச்சிகளும், முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கூறுகின்றன. முதலில் நம்நாட்டு மரபுகளைக் கவனிப்போம்.

  நமது மரபின்படி வேதம் அநாதியானது. அது அபௌருஷேயம் என்று கூறுகிறார்கள். அபௌருஷேயம் என்றால் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்கப்பட்டதல்ல என்று பொருள். வேதத்தைப் பல ஸூக்தங்களாகப் பிரித்திருக்கிறார்கள். உதாரணமாக ரிக் வேதத்தில் 1028 ஸூக்தங்கள் உள்ளன. ஒவ்வொரு ஸூக்கத்திற்கும் ஒரு ரிஷி உண்டு. ஆனால் அந்த ரிஷி அந்த ஸூக்தத்தை எழுதியதாகவோ, புனைந்ததாகவோ நம் மரபில் கூறவில்லை. 

  ரிஷிகளும் மனிதர்கள் தான், மனிதர்களில் உயர்ந்தவர்கள். ரிஷிகள் ஸூக்தங்களைப் புனைந்தார்கள் என்றால் வேதம் அபௌருஷேயமாகாது.
தனி மனிதன் புனையவில்லை என்றால், பகவான் வேதத்தைப் புனைந்தாரா? அப்படிப் பகவான் வேதத்தைப் புனைந்தார் என்றால், அவர் ஒரு கால கட்டத்தில் அதைச் செய்திருக்க வேண்டும். அப்படியானால் அதற்குமுன், வேதம் இல்லாத, காலம் இருந்திருக்க வேண்டும்.

  ஆனால் வேதம் அநாதி என்று நம் மரபு சொல்லுகிறது. அநாதி என்ற வடமொழிச் சொல்லிற்கு என்ன பொருள் என்றால் அதற்கு முந்தியதாக, அதற்கு ஆதியாக எதுவும் இல்லை என்பதுதான். பகவான் வேதத்தைப் புனைந்து அதற்குமுன் ஒருகாலம் இருந்தால், வேதம் அநாதி ஆகாது. ஆகையால் பகவானும் வேதத்தைப் புனையவில்லை; பின் எப்படி வேதம் தோன்றியது?

  வேதம் அநாதி என்றால் அது மனிதன் தோன்றுவதற்கு முன்னால், உலக சிருஷ்டிக்கு முன்னால், காலம் ஏற்படுவதற்கு முன்னால் இருந்திருக்க வேண்டும். அதாவது பகவானும் வேதமும் எப்பொழுதும் இருந்திருக்க வேண்டும். எல்லாமே பகவானிடமிருந்து வந்தது என்ற தத்துவப்படி பார்த்தால், பகவானிடமிருந்து வேறாகத் தனியாக வேறு ஒன்றும் இருந்திருக்க முடியாது. வேதத்தை பகவானும் உண்டு பண்ணவில்லை. ஆனாலும் அது அநாதி என்றால் அது எப்படி ஸாத்தியம்? 

  பகவானுக்கும் புறம்பாக ஒன்றுமில்லை என்ற கொள்கைக்கு முரண்பாடாயிருக்கிறதே!

    .ஒரே குழப்பமாக இருக்கிறதல்லவா?

  இதற்கு விடை வேதத்திலேயே உள்ளது. சுக்கில யஜுர் வேதத்தின் கடைசிப் பகுதியான பிருஹதாரண்யக உபநிஷத் இந்தக் குழப்பத்தைப் போக்குகிறது. மனைவி மைத்ரேயி தன் கணவனான யாக்ஞ்யவல்கியரை அமிருதத்வம் (சாகாமை) அடைய வழி என்ன என்று கேட்டபொழுது, அவர் கூறினார்: 

  ‘ஈர விறகால் மூட்டப்பட்ட தீயிலிருந்து பிரிந்து புகை எவ்வண்ணம் கிளம்பிச் செல்லுகிறதோ, அவ்வண்ணமே ரிக்-யஜுர்-ஸாம-அதர்வண வேதங்கள் பரமாத்மாவிடமிருந்து மூச்சுக்காற்று போலத் தோன்றியவையாகும்.’ (பி.உ. 11 4.10)

  அநாதியாக பகவான் என்றென்றும் இருந்திருக்கிறார் என்றால், வேதமும் அவருடனேயே, அவரது மூச்சுக்காற்றாக, அநாதியாக இருந்திருக்கிறது என்றாகி விடுகிறது! இதில் கவனிக்க வேண்டிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நம் மரபின்படி பகவானும் வேதத்தை இயற்றவில்லை, உண்டு பண்ணவில்லை என்பது தான். எப்பொழுதுமே பகவானும் வேதமும் சேர்ந்தே இருந்திருக்கின்றன.

  நான்கு வேதங்களுக்கும் விரிவான உரை எழுதிய ஸாயணாச்சாரியார் வேதத்தைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது ‘யஸ்ய நி: ச்வஸிதம் வேதா:’ என்கிறார். ‘எவனுக்கு வேதம் தான் மூச்சுக் காற்றோ’ என்று இதற்குப் பொருள். உபநிஷத்தில் கையாண்ட அதே நி: ச்வஸிதம் என்ற சொல்லை ஸாயனரும் சொல்லியிருக்கிறார். இங்கேயும் பகவான் வேதத்தைப் புனைந்தார் என்று கூறவில்லை.

  பகவத் கீதையில் பகவான் கூறுகிறார். ‘வேதை: ச ஸர்வை: அஹமேவ வேத்ய:’, அதாவது, ‘நானே எல்லா வேதங்களாலும் அறியப்படுகிறவன்! வேதகிருத் (வேதத்தைப் புனைந்தவன்) 
என்று சொல்லவில்லை: ஆனால் வேதாந்த கிருத் (வேதங்களின் முடிவான தத்துவத்தை உண்டு பண்ணினவன்) என்று பேசியிருக்கிறார். வேதாந்தம் என்ற தத்துவ ரூபத்தில் மக்களுக்கு வழிகாட்டியாக வருவதற்கு முன்னாலேயே, உலக சிருஷ்டி ஏற்படுவதற்கு முன்பே, சப்த ரூபத்தில் இந்த வேதங்கள் பகவானோடு பகவானாக, அவரது மூச்சுக் காற்றாக இருந்திருக்கின்றன.

  ஒவ்வொரு ஸூக்தத்திற்கும் ஒரு ரிஷி (அல்லது சில ரிஷிகள்) உண்டு என்று பார்த்தோம். ஆனால் அந்த ரிஷிகள் அந்தந்த ஸூக்தங்களைப் புனைய வில்லை என்றும் பார்த்தோம். பின் ரிஷிக்கும் ஸூக்தத்திற்கும் என்ன தொடர்பு? சப்த அவைகளாக, பகவானின் மூச்சுக்காற்றாக இருந்த வேத மந்திரங்களைக் கண்டுபிடித்து, நமக்குப் புரியும் படியாக அவற்றுக்குச் சொல் வடிவம் கொடுத்து அவர்கள் உலகில் அவற்றைப் பரப்பினார்கள் என்பதேயாகும்.

  ரிஷிகளுக்கு உலகில் ஏற்படுகிற எல்லா சலனங்களும் - அதாவது பரமாத்மாவன் சுவாஸகதிகளும்-தெரிந்தன. தெரிந்தது மட்டுமில்லை. ரேடியோ போன்ற சாதனைகள் மின் அலையை சப்த அலையாக மாற்றுவது போல, அந்த சலனங்களுக்குரிய சப்தங்கள் மனிதர்களுடைய காதுகளுக்கு எட்டும்படியான சப்தங்களாகவும் இவர்களுக்குத் தெரிந்தன. அப்படிப்பட்ட சப்தங்களையே வேத மந்திரங்கள் என அவர்கள் சீடர்களுக்குப் போதித்தது, அவர்கள் மூலமாக உலகிற்குத் தந்திருக்கிறார்கள்.

  வேத மந்திரங்களுக்கு சுருதி என்று வடமொழியில் பெயர் உள்ளது. 

  எது கேட்கப்படுகிறதோ அது சுருதியாகும். 

நம் மரபின்படி குரு வாயால் வேதத்தை ஓதி, சீடர்கள் அதைக் காதால் கேட்டு, பாடம் பண்ணி, உலகிற்குப் பரப்பினார்கள் இதற்குக் ‘கர்ண பரம்பரை’ காதால் கேட்டுத் தலைமுறை தலைமுறையாக வந்தவை எனக் கூறுவார்கள். மகரிஷிகள் பிரபஞ்சத்தில் சப்த அலைகளாக இருந்த வேத மந்திரங்களைத், தங்களுடைய தெய்வீக சக்தி படைத்த காதுகளால் கேட்டு மக்களிடையே பரப்பினார்கள் என்பதாலும் வேதத்திற்கு சுருதி என்று பெயர் வந்தது. சுருதி என்பதைத்தான் தமிழில் எழுதாக் கிளவி என்கிறார்கள்.

[கிளத்தல்= கூறுதல்    கிளவி=கூறக்காதால் கேட்டல் 

வேத மந்திரங்களைக் கண்டுபிடித்த மகரிஷிகளுக்கு மந்திரதிரஷ்டார: என்று பெயர் உண்டு. இந்த வடமொழிச் சொல்லிற்கு மந்திரங்களைப் பார்ப்பவர்கள் என்று பொருள் ஆகும். மகரிஷிகள் வானத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த வேதமந்திரங்களைத் தங்களுடைய தெய்வீகக் கண்களால் பார்த்தார்களா? அப்படியானால் அந்த வேத மந்திரங்கள் எந்த லிபியில் எழுதப்பட்டிருந்தன? தேவநாகரியிலா அல்லது பிராம்மியிலா? வேத சப்தங்களையும், ஸ்வரங் களையும் எந்த லிபியிலும் எழுத முடியாதே!
.
ரிஷிகள் வேத மந்திரங்களைப் பார்த்தார்களா, கேட்டார்களா? 

இதற்கெல்லாம் விளக்கங்கள் என்னவென்றால், உண்மையிலேயே, மகரிஷிகள் நியம நிஷ்டையுடன் கடும் தவம் செய்து, தியானத்தின் உச்ச நிலையை அடைந்த பொழுது, அவர்களுடைய உள்ளுணர்வால் இந்த மந்திரங்கள், இருட்டில் கருவானில் திடீர் என மின்னல் பளிச்சிடுமாப் போலத் தோன்றின; வடமொழியில் ஸ்புரித்தன என்றும் ஆங்கிலத்தில் flash ஆகின என்றும் கூறலாம். அந்த ஆழ்ந்த நியான நிலையில் ரிஷிகளுடைய கண்கள் எதையும் பார்க்கவில்லை. காதுகள் எதையும் கேட்கவில்லை; ஆனாலும் அந்த மந்திரங்கள் அவர்களுடைய உள்ளுணர்வில் பளிச்சிட்டன.

இதில் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. மகரிஷிகள் வேத மந்திரங்களைக் கண்டுபிடித்தார்கள் என்றால், இல்லாத ஒன்றை, அவர்கள் புதியதாகக் கண்டுபிடித்தார்கள் என்று பொருளில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் தான் நியூட்டன் பூமியில் ஈர்ப்பு சக்தி (gravitation) கண்டுபிடித்தான். ஆனால் அதற்கு முன்னால் இந்த ஈர்ப்பு சக்தி இல்லாமலிருந்த தில்லை. ஏற்கனவே இருந்ததை, மக்களுக்குத் தெரியாமலிருந்ததை அவன் கண்டுபிடித்து மக்களுக்கு விளக்கினான். அதே மாதிரி ஏற்கனவே இருந்த அமெரிக்காவை கொலம்பஸ் முதல் முறையாகக் கண்டு, ஐரோப்பிய மக்களுக்குத் தான் கண்டதைக் கூறினான். இதே மாதிரிதான், மகரிஷிகளும் ஏற்கனவே சப்த அவைகளாக இருந்த வேத மந்திரங்களைக் கண்டு பிடித்தார்கள்; அதாவது சாதாரண மக்கள் கேட்கக்கூடிய ஒலி வடிவத்தைக் கொடுத்தார்கள்
[தொடர்ந்து வரும்]