Wednesday, 2 July 2014

வேதம் அநாதி

                                                



                                                     வேதம் அநாதி
 ங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, இங்கு வந்த சில ஆங்கிலேயர்களும், மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி நாட்டவர்களும் படிப்பில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் மிகுந்த சிரமத்துடன் வடமொழியைப் பயின்று பல வடமொழி நூல்களைப் படித்து, ஆங்கிலத்திலும் மற்ற ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்ப்புச் செய்திருக்கிறார்கள். சிறுகச் சிறுக இந் நூல்களைப் பற்றிய ஆராய்ச்சியும் செய்திருக்கிறார்கள். இப்படிச் செய்த பல ஆராய்ச்சிகளில் வேதத்தின் கால நிர்ணயமும் ஒன்றாகும்.

 முதலில், பொதுவாக, ஒரு நாட்டின் பண்டைய கலாச்சாரத்தைப் பற்றிய கால நிர்ணயம் எவ்வாறு செய்கிறார்கள் என்று பார்ப்போம். சமீப காலத்தில் கார்பன் டேடிங் பிராஸஸ் (Dsting process)
என்று ஒரு பரிசோதனை முறையைக் கண்டு பிடித்துள்ளார்கள். இதன்படி ஒரு நாட்டின் பண்டைய நூல்களோ, மத சம்பந்தமான பாசுரங்களோ, காவியமோ எழுதி வைத்திருக்கும் காகிதம், ஓலை உலோகத்தட்டுப் போன்ற பொருளைப் பரிசோதித்து அந்தக் கலாசாரத்தின் காலத்தை நிர்ணயிப்பார்கள்.

  உதாரணமாக எகிப்து நாட்டை எடுத்துக் கொள்ளுவோம். அவர்களுடைய மிகப் பழமையான கதையாகிய ‘சின்பாத் என்கிற மாலுமி’யும், அவர்களுடைய அக்கால தெய்வமான ஸூரியனின் மேல் உள்ள பாசுரங்களும், மற்ற படைப்புகளும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. நாணல் போன்ற நீர் வாழ் தாவரத்திலிருந்து தயாரித்த ‘பபைரஸ்’ (Papyrus) என்ற காகிதம் போன்ற பொருளில் அவர்கள் இவைகளையெல்லாம் எழுதி, அவைகளைச் சுருட்டி, சுருள் சுருளாக வெகு பத்திரமாகப் பெட்டிகளில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். கார்பன் டேடிங் பிராஸஸ் மூலம் இந்தப் பபைரஸ்யை ஆராய்ந்து எகிப்தின் பண்டைய நாகரிகம் இன்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சந்தேகத்துக்கிடமில்லாமல் நிர்ணயித்திருக்கிறார்கள்.

  இப்பொழுது ஈராக் என்று கூறப்படும் நாட்டில், வெகு காலத்திற்கு முன், பாபிலோனியன் நாகரிகமும் பண்பாடும் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தது. பல அரச வம்சங்கள் நாட்டை நல்ல முறையில் ஆண்டு, அயல் நாடுகளைப் போரில் வென்று, கோலோச்சி வந்தன. அந்தப் பண்பாட்டின் புகழ்வாய்ந்த இலக்கியமான கில்கமேஷின் காவியத்தையும் மற்ற மதசம்மந்தமான பாசுரங்களையும் அவர்கள் களிமண் ஓடுகளில் பொறித்தார்கள். நல்ல களிமண்ணால், சதுரமாகவும் நீண்ட சதுரமாகவும், மெல்லிய ஓடுகளைச் செய்து, அவைகள் ஈரமாக இருக்கும் பொழுதே, எழுத்தாணியால் அவர்கள் தங்களுடைய இலக்கிய, மத சம்பந்தமான படைப்புகளை அவைகளின் மேல் எழுதினார்கள். பிறகு, சூளையில் அவைகளைச் சுட்டு எடுத்தார்கள். இந்த ஏடுகளை அடுக்கிக் கட்டுகளாகக் கட்டிப் பெட்டிகளில் பாதுகாத்தார்கள். இந்த ஓடுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவைகளைக் கார்பன் டேடிங் பிராஸஸ் மூலம் பரிசோதித்ததில், இவைகள் 5500 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டன என்று உறுதியாகக் கூற முடிந்தது. பாபிலோனிய நாகரிகம் கி.மு. 35வது நூற்றாண்டில் வளம் பெற்று விளங்கியது என்று நிர்ணயிக்க முடிந்தது.

  இந்தியாவில் பௌத்த மதக் கோட்பாடுகளை, அசோகர் காலத்தில், கல்வெட்டுகளில் பொறித்தார்கள். மற்ற சில நாகரிகங்களின் இலக்கியத்தை செப்பேடுகளிலும் மற்ற பொருள்களிலும் பதித்தார்கள். இவைகளை எல்லாம் கார்பன் டேடிங் பிராஸஸ் மூலம் கால நிர்ணயம் செய்ய முடிந்தது.
ஆனால் ஆராய்ச்சியாளர்கள் வேதத்தைப் பற்றிய கால நிர்ணயத்தை இந்த முறையில் செய்ய முடியவில்லை. குரு  தன வாயால் ஓதி, சீடர்கள் காதால் கேட்டுப் பாடம் பண்ணி, மற்றவர்களுக்குப் பரப்பிய வேதத்தை எவ்வாறு கார்பன் டேடிங் செய்வது? அதுதான் எழுதாக் கிளவி ஆயிற்றே. ஆகையால் அவர்கள் வேறு இரண்டு முறைகளைக் கையாண்டு வேத காலத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

  ஆங்கிலேயர்களைப் போலவே சில இந்தியர்களும் வேத காலத்தை நிர்ணயம் செய்ய ஆராய்ச்சி நடத்தி இருக்கிறார்கள். நம் நாட்டு சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட மூத்த தலைவரான பாலகங்காதர திலகரும் அவர்களில் ஒருவர். ஆங்கிலமும், வடமொழியும் நன்றாகப் பயின்று, சம்பந்தப்பட்ட நூல்களைப் படித்து, ஆங்கிலேயரின் ஆராய்ச்சி முறைகளைப் பின்பற்றி அவர் கி.மு. 6000ல் வேதம் புனையப்பட்டது என்று நிர்ணயம் செய்திருக்கிறார். வேறு சிலர் வேதம் கி.மு. 3000ல் செய்யப்பட்டது என்கிறார்கள். மாக்ஸ்முல்லர் போன்ற சில அறிஞர்கள் இன்றும் சமீப காலமாக, கி.மு. 1500ல் வேதத்தை இயற்றினார்கள் என்று கூறுகிறார்கள். இவர்கள் கையாண்ட இரண்டு முறைகளையும் சற்று பார்ப்போம்.
(தொடரும்)

No comments:

Post a Comment